நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும், சாலைகளில் வெள்ளமெனத் தண்ணீர் தேங்கி உள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும், பல இடங்களில் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 சிறுவர்கள், 7 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. தற்போது மீட்பு பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுள்ளன. முன்னதாக பலி எண்ணிக்கை 15-ஆக இருந்தது. தற்போது 17 ஆக உயர்ந்திருக்கிறது.