This Article is From Jul 27, 2019

3 நிமிடத்தில் 680 கிலோ தங்கம் கொள்ளை… பிரேசில் ஏர்போர்ட்டில் நடந்த துணிகரம்!

‘நாங்க போலீஸ்’ என்று சொல்லிக் கொண்டு கடந்த வியாழக் கிழமை சாவ் பாலோ விமான நிலையத்திற்கு சிலர் வந்துள்ளனர்.

3 நிமிடத்தில் 680 கிலோ தங்கம் கொள்ளை… பிரேசில் ஏர்போர்ட்டில் நடந்த துணிகரம்!

திருடப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்

680 கிலோ தங்கத்தை, பிரேசிலின் சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருடி எடுத்துச் செல்ல ஆனது 3 நிமிடம் மட்டுமே. இந்த கொள்ளையில் ஈடுபட்டது வெறும் 8 பேர். என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நிற்கிறது பிரேசில் அரசு. 

‘நாங்க போலீஸ்' என்று சொல்லிக் கொண்டு கடந்த வியாழக் கிழமை சாவ் பாலோ விமான நிலையத்திற்கு சிலர் வந்துள்ளனர். அவர்கள்தான் உண்மையில் கொள்ளையர்கள். போலீஸ் வண்டி, போலீஸ் உடை சகிதம் வந்த அவர்களைப் பார்த்து, ‘இவங்க உண்மையான போலீஸ் போல' என விமான நிலைய ஊழியர்களும் நம்பிவிட்டார்கள். போலீஸாக வந்த கொள்ளையர்கள், ஊழியர்களுக்கு லக்கேஜை வண்டியில் ஏற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்த அனைத்துக் காட்சிகளும் சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளன.

உண்மையில் அந்த லக்கேஜில் இருந்த தங்கக் கட்டிகள் செல்ல வேண்டியது சூரிச் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு. கொள்ளையர்கள் குறித்து தற்போது விசாரணை செய்து வரும் சாவ் பாலோ போலீஸ், “கிட்டத்தட்ட 720 கிலோ கிராம் கொண்ட தங்கக் கட்டிகள் திருடப்பட்டுள்ளன. அதன் மொத்த மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்” என்று வாய் பிளக்க சொல்கிறது. 

“மிகவும் திறன் வாய்ந்த திருட்டு கும்பலால் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது அவர்களின் முதல் கொள்ளை இல்லை என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும்” என்று காவல் துறையின் தலைவர் ஜோ கார்லோஸ் மிக்கேல் ஹூப் விளக்குகிறார். போலீஸுக்கும், சில சிசிடிவி காட்சிகளைத் தவிர வேறு எவிடென்ஸ் கிடைக்கவில்லை. தொடர்ந்து துப்பு கிடைக்க முயன்று வருகிறார்கள்.

பிரேசிலில் இதைப் போன்ற கொள்ளை சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு அந்நாட்டின் மத்திய வங்கியில் ஓட்டைப் போட்டு 67 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தைத் திருடியது ஒரு கும்பல். இதைத் தவிர பலரும் தொடர்ந்து ஏடிஎம்-களுக்கு வெடி வைத்துத் திருடுவது, கார்கோ லாரிகளை கடத்துவது, தொழிற்சாலைகளில் கொள்ளையடிப்பது என்று தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


 

.