This Article is From Nov 23, 2019

யார் இந்த அஜித் பவார்? சிவசேனா - காங்கிரஸ் தலைவர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அரசியல்வாதி!!

மகாராஷ்டிராவில் இன்று காலை ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை பெரும்பான்மை மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அஜித் பவாரை சிலர் துரோகி என்கிறார்கள், சிலர் முதுகில் குத்தி விட்டார் என்கிறார்கள். ஆனால் அவரோ மாநில நலனுக்காக பாஜகவை ஆதரித்தோம் என்று கூறியிருக்கிறார்.

யார் இந்த அஜித் பவார்? சிவசேனா - காங்கிரஸ் தலைவர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அரசியல்வாதி!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன்தான் இந்த அஜித் பவார்.

மகாராஷ்டிராவில் ஒரு நாள் இரவில் இத்தகைய அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பதை இந்திய மக்களில் பெரும்பாலானோர் எண்ணியிருக்க மாட்டார்கள். அங்கு சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைவதற்கான அனைத்து சூழலும் ஏற்பட்டிருந்தது. 

சுமார் 80 சதவீத ஏற்பாடுகள் நிறைவு பெற்று, இன்றைய தினம் கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோருவதுதான் இந்த 3 கட்சிகளின் திட்டமாக இருந்தது. இந்த நிலையில், இன்று காலை அவசரம் அவசரமாக பாஜக - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றிருக்கிறார்.

தேசியவாத காங்கிரசின் இந்த ஆதரவுக்கு அக்கட்சியின் தலைவராக இருக்கும் அஜித்பவாரே காரணம் என்றும், அவர் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. கட்சி எம்எல்ஏக்கள் உடன்பாடு இல்லாமல் அஜித் பவார் முடிவு எடுத்திருக்கிறார் என்று மூத்த தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

பெரும்பான்மையான தேசியவாத எம்எல்ஏக்கள் சிவசேனா தலைமையிலான அரசைத்தான் விரும்புவதாகவும், அவர்கள் சரத்பவார் பக்கம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுள்ள அரசியல் சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தேவேந்திர பட்னாவீஸ் அரசுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்தால் மட்டுமே பாஜக தலைமையிலான அரசு கவிழும். 

ஒரே நாள் இரவில் இத்தகைய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய அஜித் பவார், கட்சியின் மூத்த தலைவரான சரத் பவாரின் அண்ணன் ஆனந்த ராவின் மகன் ஆவார். அவரை கட்சி தொண்டர்கள் 'தாதா' என்று அழைக்கின்றனர்.

ஆனந்த ராவ் பிரபல இயக்குனர் வி. சாந்தாராமிடம் உதவியாளராக இருந்தார். பின்னாளில் சித்தப்பா சரத் பவார் அரசியலில் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து கட்சிப் பணியாற்றத் தொடங்கினார் அஜித். 

சித்தப்பா மத்திய அமைச்சர், மாநில முதல்வர் என பல்வேறு ஆட்சிப் பொறுப்புகளுக்குச் செல்ல, கட்சிப் பொறுப்புகளை அஜித் பவார் கவனித்துக் கொண்டார். 

என்.சி.பி. வலுவாக இருக்கும் பரமாதி தொகுதியில் இருந்து தொடர்ந்து 6-வது முறையாக அஜித் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ. 25 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், அஜித் பவார் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தை தொடர்ந்து அவர் தனது எம்.எல்.ஏ. பொறுப்பை கடந்த செப்டம்பரில் ராஜினாமா செய்தார். 

1991-ல் பாரமதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அஜித் பவார் நாடாளுமன்றத்திற்கு சென்றார். அப்போது, நரசிம்மராவ் பிரதமராக இருந்த சமயத்தில் சரத் பவாருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாநிலத்தில் சரத் பவார் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, மாநில அரசின் முக்கிய துறைகளின் அமைச்சராக அஜித் பவார் செயல்பட்டார். 

1999-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். இதற்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டவர் அஜித் பவார். அந்த சமயத்தில் மகாராஷ்டிராவில் தொங்கு சட்டமன்றம் அமைய, தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது 40 வயதில் மாநிலத்தின் இளம் அமைச்சராக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றார் அஜித் பவார். 

அஜித் பவாருக்கு சுநேத்ரா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஃபேஸ்புக்கில் அவருக்கு 'அஜித் தாதா பவார்' என்ற ரசிகர்கள் பக்கமும், குஜராத்தின் அகமதாபாத் நகரில் அவரது பெயரில் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. பவாரின் ட்விட்டர் பக்கத்தை 3.40 லட்சம்பேர் பின்தொடர்கிறார்கள். 

.