கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் இருக்கும் டிபிஐ வளாகத்தில், தமிழக அரசு பள்ளிகளிப் வேலை செய்யும் இடைநிலை ஆசிரியர்கள், ‘ஒரே வேலை ஒரே ஊதியம்' என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து போராட்டம் செய்து வந்தனர். இன்று அந்தப் போராட்டம் 7வது நாளை எட்டியுது. இன்று தொடக்கக் கல்வி இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கியுள்ளனர்
கடுமையான வெயில், இரவு நேரங்களில் பனி என எதையும் பொருட்படுத்தாமல், ‘அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்' என்று ஆசிரியர்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
3 நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு தரப்பு, ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அப்போது உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
இந்நிலையில் நாகையில் அரசு பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மணியன், ‘கஜா புயலால் நாகை உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைப் போன்ற நேரத்தில் அரசின் அங்கமாக இருக்கும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கலாமா..?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.