This Article is From Jul 25, 2018

பெங்களூருவில் சிக்கிய கொலம்பிய திருடர்கள்... காட்டிக்கொடுத்த சிசிடிவி!

திருடர்களுள் ஒருவன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டதும் திருட வந்த மூவரும் தப்பி ஓட்டம்

பெங்களூருவில் சிக்கிய கொலம்பிய திருடர்கள்... காட்டிக்கொடுத்த சிசிடிவி!
Bengaluru:

பெங்களூரு: ஒரு திருடர் கூட்டம் பட்டு வியாபாரியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற சிசிடிவி வீடியோ பதிவுகளை பெங்களூரு காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

ஜூன் 22-ம் தேதி நடைப்பெற்ற இச்சம்பவத்தின் வீடியோவில், டி பெலியா என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள பெண், தலையை மறைத்தவாறு வீட்டின் அழைப்புமணியை அடிக்கிறார். பின்னர் ஜன்னல், சாவித்துளை வழியே வீட்டினுள் பார்த்து உள்ளே யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார். பின்னர், தனது இரு கூட்டாளிகளையும் அழைக்கிறார். அவர்கள் இருவரும் அணிந்துள்ள தொப்பி, கையுறை ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர்கள் கைதேர்ந்த தொழில்முறைக் கொள்ளைக்காரர்கள் என்று தெரிய வருகிறது. வந்த இருவரில் ஒருவன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டதும், மூவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர்.

இவ்வீடியோவை வைத்து இந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து கொலம்பிய நாட்டுத் திருடர்களை போலிசார் கடந்த வாரம் பிடித்துள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற தொடர் கொள்ளைகளுக்கு இக்கும்பல் தான் காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயா நகரில் வசிக்கும் முன்னாள் தலைமைச் செயலாளர் கௌசிக் முகர்ஜி வீட்டிலும் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து கொள்ளையர்கள் எட்வர்ட் அலஹேண்ட்ரோ, டி பெலியா, ஜே குளோரியா, ஜாஷ் எட்வர்ட், ரோஜர் ஸ்மித் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்.

திலக் நகர், HSR லே-அவுட், ஜெயாநகர் பகுதிகளில் ஐந்து திருட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. சிவாஜி நகரில் வைத்து இவர்களை மடக்கிப் பிடித்தோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் இதற்கு முன்பாக 2010 மற்றும் 2016-ல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் வெளிச்சமாகியிருக்கிறது. நான்கைந்து மாதங்களுக்கு முன்பே பெங்களூரில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அதற்கு முன்னேற்பாடாக வாக்கி டாக்கிகள், ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டுகள், சாதாரண மொபைல் போன்கள், இன்ன பிற கருவிகளை வாங்கி வைத்திருந்ததும் தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

.