ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ராகுலுக்கு அனுமதி அளித்தது எப்படி என்றும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்றும், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தர இணை இயக்குனருக்கு, கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த புதனன்று தமிழகம் வருகை தந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற ராகுல், ஜீன்ஸ் பேன்ட், டீ சார்ட் அணிந்து கல்லூரி மாணவர் போல அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, கேள்வி கேட்ட மாணவி ஒருவரிடம் தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்றும் ராகுல் என்றே அழைக்கலாம் என்றும் கூறி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு பணிகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார். அப்போது, மோடியை கட்டிபிடித்தது ஏன் என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், “அன்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கின்றன.நான் அந்த அன்பை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் கட்டிப்பிடித்தேன் என்று கூறினார்.
மேலும், பணமதிப்பிழக்கம், காஷ்மீர் விவாகரம் என மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதிலை தந்த மாணவிகளுக்கு பெரும் உற்சாகம் அளித்தார். கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. பல்வேறு தரப்பினராலும் ராகுல் பேச்சு பாராட்டப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் நிகழச்சியை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நடத்த அனு ம தித்தது எப்படி என்று விசாரணை செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் சாருமதி உத்தரவு அளித்துள்ளார்.
மேலும், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், இது போன்ற நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று விசாரிக்குமாறு மண்டல இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.