This Article is From Sep 03, 2019

Sbi: கல்விக்கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலிப்பதா? எஸ்பிஐ-க்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை!

கல்விக் கடன் வசூலிப்பது தொடர்பான கொடூரமான ஒரு ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு மத்திய பாஜக அரசின் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Sbi: கல்விக்கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலிப்பதா? எஸ்பிஐ-க்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை!

கல்விக்கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலிப்பதா? எஸ்பிஐ வங்கிக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தால் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கல்விக் கடன் வசூலிப்பது தொடர்பான கொடூரமான ஒரு ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு மத்திய பாஜக அரசின் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்று கூறியுள்ள கே.எஸ்.அழகிரி, அதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் கல்விக்கடனாக ரூபாய் 17 ஆயிரம் கோடி பெற்றிருக்கின்றனர். இதில் ரூ.1875 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வாராக்கடன் என்று குறிப்பிட்டு ரூபாய் 847 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதில் ரூபாய் 381 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலித்து பாரத ஸ்டேட் வங்கிக்கு திரும்ப வழங்க வேண்டும். மீதி தொகையை வசூல் கட்டணமாக ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்கிற வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி வசூலாகிற பணத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 55 சதவீதம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீதம் என்று பிரித்துக் கொள்ளப்படும். இத்தகைய கொடூரமான ஒரு ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு மத்திய பாஜக அரசின் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய வங்கிகளில் கல்விகடன் பெற்ற மாணவர்கள் கடுமையான மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்த கடனை வசூலிக்கிற பொறுப்பை ரிலையன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் வசூலிப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை வசூலிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான அடியாட்களை நியமித்துள்ளது.

இப்படி நியமிக்கப்பட்டவர்கள் மாணவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்காக பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர். இத்தகைய கொடிய அடக்கு முறையை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, சமூக நோக்கத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக்கடன் திட்டத்தை சீர்குலைக்கிற வகையில் தனியார் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு பாரத ஸ்டேட் வங்கி செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தனியார் நிறுவனத்தின் மூலமாக கடன் பெற்ற மாணவர்கள் மீது ஏவி விடப்படுகிற அடக்கு முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இனியும் இத்தகைய அடக்குமுறைகள் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மீது தொடர்ந்தால் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

.