This Article is From Jul 12, 2018

தாய்லாந்து குகையில் மாட்டிக்கொண்ட சிறுவர்களும்… எலோன் மஸ்க்கின் புலம்பலும்!

உலக அளவில் மிகவும் பிரபலமான பணக்காரர்களில் எலோன் மஸ்க்கும் ஒருவர்

தாய்லாந்து குகையில் மாட்டிக்கொண்ட சிறுவர்களும்… எலோன் மஸ்க்கின் புலம்பலும்!

உலக அளவில் மிகவும் பிரபலமான பணக்காரர்களில் எலோன் மஸ்க்கும் ஒருவர். தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை அவர் நிறுவனம் சார்பில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் கூட அவர், ‘உலகின் எந்த மூலைக்கும் அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய அளவுக்கான ஒரு விமானத்தை உருவாக்கி வருகிறோம்’ என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். இப்படி, தொடர்ந்து பல புதுமையான விஷயங்களைச் செய்து வரும் மஸ்க், சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் குகையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிக்கியிருந்த சிறுவர்களுக்கு உதவி செய்ய சென்றார்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ‘வைல்டு போர்ஸ்’ கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். தாய்லாந்தில் ஜூலை மாதங்களில் அடை மழை பெய்யும். இந்த நேரத்தில் தம் லுவாங் குகைக்குள் செல்வது பாதுகாப்பனதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால், கால்பந்து குழுவினர் சரியாக இந்த நேரத்தில் சென்றது தான் அவர்கள் உள்ளேயே மாட்டிக் கொண்டதற்குக் காரணமாக இருந்துள்ளது. சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர்.

இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. சம்பவம் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்த உடன், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காகவே பயிற்சி பெரும் நபர்கள் சிறுவர்களைத் தேடி கண்டுபிடித்தனர். பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது.

இரண்டு வாரங்கள் போராட்டத்துக்குப் பிறகு குகையில் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.

ஆனால், இந்த மீட்புப் பணி நடந்து வரும் போதே, மஸ்க் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது, மீட்புப் பணிக்கு உதவும் வகையில் அவர் ஒரு புது விதமான நீர் மூழ்கிக் கப்பலை உருவாக்கி எடுத்துச் சென்றார். இந்த நீர் மூழ்கிக் கப்பலின் அளவு மொத்தமாக ஒரு சிறுவரின் உடலளவுக்குதான் இருந்தது. இதை மீட்புக் குழு பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று நேரில் சென்று வழங்கினார் மஸ்க்.

ஆனால், ‘இது நடைமுறைக்கு சாத்தியமாகாது’ என்று கூறி ஒதுக்கிவிட்டது மீட்புக் குழு. இருந்தும் மஸ்க் அதை அங்கேயே விட்டுவிட்டு வந்தார். அது குறித்து, ‘சிறய அளவிலான நீர் மூழ்கிக் கப்பலை தாய்லாந்திலேயே வைத்து விட்டு வந்துள்ளேன். அவர்களுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

இது ஒரு புறமிருக்க, ‘மஸ்க் விளம்பரத்துக்காகத் தான் தாய்லாந்துக்கு சென்றார்’ என்று சில நெட்டிசன்கள் கிளப்பிவிட்டனர். இதனால் கடுப்பான மஸ்க், ‘தாய்லாந்து விஷயத்தில் என்னை பல ஊடகங்கள் தவறான முறையில் சித்தரித்துள்ளன. இந்த மீட்புப் பணியில் என் பங்கு குறித்தும், அதற்கு எனக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாராட்டுகள் குறித்தும் கூறுங்கள்’ என்று ட்விட்டரில் ஒரு பதிவை தட்டிவிட்டார். 

அதில் பலர் பங்கேற்று தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மஸ்க்கிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதியப்பட்டன. 
 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.