கேரள மக்களை கண்டிக்கும் வகையில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கேரளாவில் பட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாச்சி பழத்தை உண்டதால், வாயில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த யானைக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்தது 15 வயதான யானை. இந்த யானை கருவுற்றிருந்தது. இந்த நிலையில் உணவுக்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அங்கு கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.
ஆனால் சில விஷமிகள், சமூக விரோதிகள் அன்னாச்சி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது.
இதில் யானையின் நாக்கு மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. இதுதொடர்பான படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை உலுக்கின.
யானை காயம் அடைந்த தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்கப்பட்ட பின்னர் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி கடந்த 27-ம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அன்னாச்சி பழத்திற்குள் பட்டாசு வைத்தவர்கள்தான் யானை உயிரிழப்புக்கு முக்கிய காரணம் ஆவார்கள். அவர்கள் மனிதர்கள்தானா என்று கேள்வி கேட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
இன்றைக்கு சமூக வலைதளங்களில் யானைக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகள் நிரம்பி வழிகின்றன.
குறிப்பாக கேரள மக்களை கண்டிக்கும் வகையில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கேரளா எழுத்தறிவு மிக்க நாடு. இதை குறிப்பிடும் வகையில் 'எழுத்தறிவு என்பது கல்வி அறிவைக் குறிக்காது' என பதிவர் ஒருவர் கூறியுள்ளார்.
கடவுளின் சொந்த நாடு கேரளா அல்ல என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவர் யானை தனது பிள்ளைகளுடன் விளையாடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அன்னாச்சி பழத்திற்குள் பட்டாசுகளை வைத்து யானைக்கு அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரபல நடிகரும், ஐ.நா.வின் சுற்றுச் சூழல் திட்டங்களுக்கான தூதருமான ரன்தீப் ஹூடா வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
Click for more
trending news