இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா வைரஸால் கேரளாவை சேர்ந்த மாணவி முதலில் பாதிக்கப்பட்டார்
- சீனாவின் வுஹானிலிருந்து 20 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்
- கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
Thiruvananthapuram: கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எளிதல்ல என்று அதிலிருந்து மீண்ட கேரள மாணவி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தற்போதைய சூழலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட 20 வயது மாணவி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கேரளாவை அவர் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள பல்கலைக் கழத்தில் பயின்று வருகிறார்.
கொரோனா குறித்த தனது அனுபவம்பற்றி அவர் கூறியதாவது-
கொரோனா பாதிக்கப்பட்ட பின்னர் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அதிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதானது அல்ல. தொடர்ந்து எனது உடல்நிலை முன்னேற்றத்தை மருத்துவர்கள் கண்காணித்து வந்தார்கள்.
அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட எனக்கு கடந்த ஜனவரி 30-ம்தேதி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் பயணம் செய்த 2 பேரை தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களை மருத்துவ அதிகாரிகள் தொடர்பு கொண்டு சிகிச்சை அளித்தனர்.
என்னிடம் மருத்துவர்களும் அதிகாரிகளும், எந்த விமானத்தில் வந்தீர்கள், இருக்கை எண், என்னுடன் பயணம் செய்தவர்கள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
சீனாவிலும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலளவில் நான் நன்றாக உள்ளேன். கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா எனது தாயாரை தொடர்பு கொண்டு பேசினார். அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்தார்.
நான் வீட்டிற்கு வந்த பின்னரும் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். அது அவ்வளவு எளிதானது அல்ல. மருத்துவர்கள் எனது மன நிலையையும் கவனித்துக் கொண்டார்கள்.
ஜனவரி 17-ம்தேதி வரைக்கும் சீனாவில் எல்லாம இயல்பாகத்தான் இருந்தது. மக்கள் முகமூடி அணிந்து தெருக்களில் சென்றனர். அதன்பின்னர் நிலைமை மாறிவிட்டது. நாங்கள் ஜனவரி 23-ம்தேதி விமான டிக்கெட்டுகள் பதிவு செய்திருந்தோம். கட்டுப்பாடுகள் காரணமாக நாங்கள் குன்னிங்கிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டும்.
ஆனால் ஜனவரி 22-ம்தேதி விமான நிலையங்கள் மூடப்பட்டதாக எனது மூத்த மாணவர்கள் தெரிவித்தனர். உடனே நாங்கள் விமான நிலையம் சென்று குன்னிங் செல்லும் விமானத்தில் ஏற முயன்றோம். தாமதம் காரணமாக அதனை நாங்கள் தவற விட்டோம். பின்னர் ரயில் மூலமாக குன்னிங் சென்றோம்.
நாங்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியபோதும், விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு சென்று திரும்பியபோது எங்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
மொத்தம் 20 இந்திய மாணவர்கள் வுஹானிலிருந்து கிளம்பினோம். கொல்கத்தாவை நாங்கள் ஜனவரி 23-ம்தேதி அடைந்தோம். மறுநாள் சிலர் கேரளாவுக்கு வந்து விட்டனர்.
இந்தியா சென்ற பின்னர் மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு நான் இந்திய தூதரகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் ஜனவரி 25-ம்தேதி வருவதாக மருத்துவ முகாமுக்கு தகவல் தெரிவித்தேன். ஜனவரி 27-ம்தேதி எனக்கு தொண்டை வலி ஏற்பட்டது. உடனடியாக நான் இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். என்னுடன் தாயார் வந்தார்.
நான் தனிமைப்படுத்தப்பட்டேன். என்னுடன் இன்னும் 4 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு கொரோனா நெகட்டிவாக இருந்தது. என்னிடம் ஏதும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. திரிச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக செய்திகள் வந்தன. அது என்னைத்தான் குறிக்கிறதோ என எண்ணினேன். பின்னர் மருத்துவர்கள் என்னிடம் விளக்கினர்.
சிகிச்சை எல்லாம் முடிந்தபின்னர் பிப்ரவரி 20-ம்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். அதன்பின்னர் 14 நாட்கள் வீட்டில் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் இருந்தேன்.
சீனாவுக்கு எப்போது திரும்புவது என்று தெரியவில்லை. பல்கலைக்கழகம் பிப்ரவரி 15-ம்தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டும். எனது வகுப்பில் 65 பேர். அவர்களில் 45 பேர் இந்தியர்கள். இப்போது நாங்கள் வகுப்பை ஆன்லைனில் கவனித்து வருகிறோம். தடை நீங்கப்பட்டால் மட்டுமே நாங்கள் வுஹான் செல்ல முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.