கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை? என்ன விலைக்கு வாங்கப்பட்டன? ஸ்டாலின் கேள்வி
ஹைலைட்ஸ்
- கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை வாங்கப்பட்டுள்ளன?
- என்ன விலைக்கு வாங்கப்பட்டன? என்பதை அறிவிக்க வேண்டும்
- அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்
கொரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் எத்தனை? என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் இருந்து 6 லட்சம் துரித பரிசோதனை கருவிகளை வாங்கி இருக்கும் மத்திய அரசு, அவற்றில் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் (ஆர்.டி.) உபகரணங்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து சேர்ந்தன. இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை விரைவாக அறிய முடியும்.
இந்த ஆர்.டி. கிட் (ரேபிட் டெஸ்ட் கிட்) எனப்படும் துரித பரிசோதனை உபகரணங்களை கொண்டு பரிசோதனைகள் செய்து கொரோனா பாதித்த நபரா? அல்லது இல்லையா என 45 நிமிடங்கள் முதல் 2 மணிநேரத்தில் உறுதி செய்ய முடியும்.
இந்நிலையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் எத்தனை - என்ன விலை- எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை அரசு அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 'கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்திற்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அதே போல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.