This Article is From Jun 06, 2019

பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்? டிடிவி தினகரன்

பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்? டிடிவி தினகரன்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஷியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் வெளியாகி சில மணிநேரங்களிலே, மாணவிகளின் அடுத்தடுத்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தமிழக மக்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

ஒவ்வொரு முறை நீட் தேர்வு முடிவுகளின் போதும், தமிழக மாணவ-மாணவியர் இதுபோன்று தற்கொலை செய்து கொள்வது தொடர்கதை ஆகிவருகிறது. நீட் தேர்வால் இன்னும், எத்தனை அனிதாக்கள், ரிதுஸ்ரீக்களை நாம் இழக்க உள்ளோமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள் அனைவரும் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் நீட் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி- உரிய தீர்வு காண முயற்சிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதேபோல், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது ட்விட்டர் பதிவில், இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது?

தமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது என்று தெரிவித்துள்ளார்.

.