தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக உள்ளது
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது
- விழுப்புரத்தில் மட்டும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
- மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு
நேற்று வரை தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 6 பேர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
“தமிழகத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், சென்னையைச் சேர்ந்த 43 வயதான ஒருவர், சமீபத்தில் திருவனந்தபுரம் சென்று வந்ததால் தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த 28 வயது நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லிக்குப் பயணம் செய்து திரும்பி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மூவரும் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, டெல்லிக்குப் பயணம் செய்து மதுரை திரும்பிய இருவருக்கு கொரோனா வந்துள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரின் ஆரோக்கியமும் சீராக உள்ளது,” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை தகவல் தெரிவித்தார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் மூச்சுத் திணறல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,08,677 வீடுகளில் 3,96,147 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.