Nithyananda News - நித்தியானந்தாவிடம் சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக சொல்லப்படுவது பற்றி விஜயகுமார்
Nithyananda News - குஜராத் நீதிமன்றம், கர்நாடக நீதிமன்ற, வெளியுறவுத் துறை அமைச்சகம் என்று எத்தனை பேர் நித்தியானந்தாவைத் தேடினாலும், அவர் நிழல் இருக்கும் இடம் கூட இன்னும் இந்திய அரசு தரப்புக்குத் தெரியவில்லை. அரசு சார்பில், “நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார்” என்று சொல்லப்பட்டாலும், தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து வருகிறார் அவர். அதில் தன்னைத் தேடுபவர்கள் பற்றியும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் கேலி செய்கிறார். தொடர்ந்து, ‘ஆன்மிக சொற்பொழிவுகளை' ஆற்றி வருகிறார். என்னதான் பலரும் அவருக்கு கிடுக்குப்பிடி போட நினைத்தாலும், ‘எனக்கு எண்டு கார்டு போட முடியாது' என்று சொல்லாமல் சொல்லி வருகிறார் நித்தி.
பாலியல் குற்றச்சாட்டுகள், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டு, முன்னாள் சீடர்களுக்குக் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு என நித்தியானந்தா மீது இல்லாத வழக்குகளே இல்லை. இப்படிப்பட்ட நேரத்தில்தான் ஒரு முன்னாள் சீடர், நித்தியானந்தா பற்றிய ‘சிதம்பர ரகசியங்களை' மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
விஜயகுமார் என்னும் பிரேம மயானந்தா என்னும் நித்தியானந்தாவின் முன்னாள் சீடர், 2007 ஆம் ஆண்டு முதல் 2107 ஆம் ஆண்டு வரை அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு கூட, நித்தியானந்தாவின் ஆசிரமங்களில் நிர்வாகப் பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது அவர் அங்கிருந்து வெளியேறி, தொடர்ந்து பல பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்களில் நித்தியானந்தா எப்படிப்பட்டவர் என்பது குறித்துப் பேசி வருகிறார்.
நித்தியானந்தா குறித்து கடந்த ஒரு மாதமாக சர்ச்சைகள் பெருகி வரும் நிலையில், ‘கைலாசா' என்னும் தனி நாட்டை அமைக்கத் திட்டமிடும் அளவுக்கு அவருக்கு எப்படி நிதி கிடைக்கிறது என்பதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவருக்கு இருப்பதாக சொல்லப்படுவதும் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக, நித்தியானந்தாவிடம் சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக சொல்லப்படுவது பற்றி விஜயகுமார், “நித்தியானந்தாவிடம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பது உண்மைதான். அவரின் திட்டமிடலும் நெட்வொர்க்கும் அப்படிப்பட்டவை. அவரைப் பெரிய மனிதராக நினைத்து, யாராவது கல்லூரி வைத்திருப்பவர்களோ நிறுவனங்கள் வைத்திருப்பவர்களோ நன்கொடை கேட்டு வந்தால் முதலில் அள்ளித் தருவார். பின்னர், அவர்களின் நிறுவனத்திலேயே தன்னையும் டிரஸ்டீயாக சேர்க்கச் சொல்வார்.
அவர்களும் நித்தியானந்தாவின் உண்மை ரூபம் தெரியாமல், சொல்வதைச் செய்து விடுவார்கள். பொறுமையாக, தன் சார்பாக அந்த நிறுவனத்தில் பெண் நிர்வாகி ஒருவரை நியமிப்பார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது, அந்த நிர்வாகி பெண் என்பதைத்தான். பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அவரிடம் அவ்வளவு சீக்கிரம் யாரும் பிரச்னை செய்ய மாட்டார்கள். இன்னொரு காரணம், அவர்கள் புகார் கொடுத்தால் அது உடனடியாக எடுபடும் என்பதால்தான்.
அதையும் மீறி, நித்தியானந்தா தரப்புக்குப் பிரச்னை வர நேர்ந்தால், உடனே தன் அடியாட்களை வைத்தே, தன் நிர்வாகிகளைத் தாக்கச் செய்வார். இதன் மூலம் அவர்கள் மீது சுற்றி இருப்பவர்களுக்குப் பரிதாபம் வரும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக, முதலில் சிறிய நன்கொடை கொடுத்து, பின்னர் அங்கேயே அமர்ந்து முழு நிறுவனத்தையும் தன் பெயருக்கு எழுதி மாற்றிவிடுவார்,” என்று கூறி அதிரவைக்கிறார்.
இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை நித்தியானந்தா எப்படிக் கையாள்கிறார் என்பது பற்றி பேசும் விஜயகுமார், “ஒன்று, அவரிடம் இருக்கும் ஹீலிங் பவர். அதைவைத்து அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவர். இன்னொன்று, அவரிடம் ஒரு வகுப்புக்குச் சென்றாலே வசியம் செய்துவிடுவார். அவரின் பேச்சைக் கேட்டாலே நாம் அவரை விட்டு வராத வண்ணம் செய்துவிடுவார்,” என அதிர்ச்சிகர பதிலைத் தந்தார்.