This Article is From Jan 14, 2020

NRC & NPR-ஐ தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதா? அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவிக்கவேண்டும்.

Advertisement
தமிழ்நாடு Edited by

“தேசிய குடிமக்கள் பதிவேடு கிடையாது. நாங்கள் கணக்கெடுக்கவில்லை” என்று கூறி, தமிழக மக்களை திசைதிருப்பி வருவது கவலையளிக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், “தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்” உள்ள வேறுபாடு தெரியாமல் அதிமுக அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

மத்திய பாஜக அரசு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் “தேசிய குடிமக்கள் பதிவேடு கிடையாது. நாங்கள் கணக்கெடுக்கவில்லை” என்று கூறி, தமிழக மக்களை திசைதிருப்பி வருவது கவலையளிக்கிறது.

இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்துவிட்டன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன.

Advertisement

பாஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சி செய்யும் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரே “நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்ற ஒன்று. அதை பீஹார் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன்” என்று துணிச்சலாக அறிவித்துள்ளார். தன் சொந்தக் கட்சி என்று கூட பாராமல் அஸ்ஸாம் மாநில பா.ஜ.க முதல்வரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் அ.தி.மு.க அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

நாட்டையே ரணகளமாக்கியுள்ள சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்து விட்டு, இன்றைக்கு “மக்களுக்கு பாதிப்பு இல்லை” “என்.பி.ஆர், என்.சி.ஆர் பற்றி எங்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் இல்லை” என்றெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி வருவதை உடனடியாக அதிமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

ஆகவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவிக்கவேண்டும்.

மக்களுக்கு நெருக்கடியும் துயரமும் அளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து அதிமு.க அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை, நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement