இஸ்லாமிய அமைப்பினர்கள், கறுப்புக் கொடியோடு ரவீந்திரநாத்குமாரின் காரை மறித்தனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததை கண்டித்து எம்.பி. ரவீந்திரநாத் காரை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தில் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கம்பம் நோக்கி, ரவீந்திரநாத் குமார் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் செல்லும் வழிதடத்தை முன்பாகவே அறிந்திருந்த இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடிகளுடன் காத்திருந்தனர்.
அப்போது, அந்த வழியே ரவீந்தரநாத்தின் கார் வந்ததும், 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பு சேர்ந்தவர்கள் காரை வழிமறித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை கண்டிக்கும் விதமாக கையில் கறுப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள், கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் எம்பி ரவீந்திரநாத் குமார் கார் வேகமாக அந்த பகுதியில் இருந்து கடந்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ரவீந்திரநாத் குமார் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டிய இஸ்லாமியர்களுக்கு கண்டனம் தெரிவித்து, பெரிய குளத்தில் பாஜகவினரும், அதிமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.