“நாட்டில் பொருளாதாரம் எப்படி இருக்கிறது மோடி” - Rahul Gandhi
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று ‘ஹவுடி, மோடி' என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பங்கேற்க உள்ளார். இது குறித்து பேசியுள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி, “நாட்டில் பொருளாதாரம் எப்படி இருக்கிறது மோடி” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
டெக்சாஸில் ஞாயிற்றுக் கிழமை நடக்கும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் சுமார் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
ராகுலைத் தொடர்ந்து அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், “முதலீட்டாளர்களின் தன்னம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளது. ஆனால், மோடி அரசுக்கு அது குறித்து எந்தவித கவலையும் இல்லை” என்று விமர்சித்துள்ளார்.
அவர் மேலும், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த 5 காலாண்டுகளாக இறங்கு முகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரும் வீழ்ச்சி இது. வாகன விற்பனை, வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாட்டுக்கு, தொடர்ந்து உயர்ந்து வரும் எண்ணெய் விலை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது” என்று விவரித்தார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில மாதங்களாக சரியான வர்த்தக உறவு இருக்கவில்லை. தற்போது நடைபெற உள்ள, ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சி மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவு சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் ட்ரம்பை தவிர, அமெரிக்க ஹவுஸ் மெஜாரிட்டி தலைவர் ஸ்டேனி ஹோயர், ஆளுநர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், மேயர்கள், பொதுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்