This Article is From Dec 10, 2019

குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்த அசாதுதீன் உவைசி!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஐதராபாத் மக்களவை தொகுதி உறுப்பினருமான அசாதுதீன் உவைசி, குடியுரிமை திருத்த மசோதா இன்னொரு தேசிய பிரிவினைக்கு வழிவகுக்கும் என்றும், முஸ்லிம்களுக்கு நாடே இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த மசோதா ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழிக்கும் அசாதுதீன் உவைசி.

New Delhi:

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான விவாதம் இன்று அனல் பறந்த நிலையில், அதன் நகலை ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் உவைசி கிழித்தெறிந்தார். இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. 'இந்த மசோதா இன்னொரு தேசப் பிரிவினைக்கு வழிவகுக்கும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு இந்த மசோதா எதிரானது' என்று கூறி விட்டு நகலை அவர் கிழித்தார். 

குடியுரிமை மசோதா தொடர்பான விவாதத்தின்போது பேசிய அசாதுதீன் உவைசி, 'தென்னாப்பிரிக்காவில் பாகுபாடு காட்டிய குடியுரிமையை மகாத்மா காந்தி கிழித்தெறிந்தார். அதன்பின்னர்தான் அவர் மகாத்மா என்ற பட்டத்தை பெற்றார். அதேபோன்றுதான் இந்தியாவில் இந்த குடியுரிமை திருத்த மசோதா உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. முஸ்லிம்களுக்கு நாடே இருக்கக் கூடாது என்ற நிலைக்கு தள்ள உருவாக்கப்பட்ட சதிதான் இந்த மசோதா. 1947-ல் ஏற்பட்ட பிரிவினைக்குத்தான் இந்த மசோதா வழி வகுக்கும்' என்றார். 

முஸ்லிம்களை ஓரம்கட்டுவதன் மூலம் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்துவதாக அசாதுதீன் உவைசி பாஜக மீது குற்றம் சாட்டினார். 

இவ்வாறு குடியுரிமை திருத்த மசோதாவை ஏற்படுத்துவதற்கு பதிலாக, அன்னிய நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீட்க மத்திய அரசு ஏன் முயற்சிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். 

இதுதொடர்பாக அவர் பேசுகையில், 'சீனாவைப் பார்த்து மத்திய அரசு பயந்து விட்டதா?' என்று விமர்சித்தார். அசாதுதீனின் இந்த செயலை ஆளும் பாஜக உறுப்பினர்கள் கடுமையாக கண்டித்தனர். இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். 

பிரிவினைக்கு வழி வகுக்கும் என்று அசாதுதீன் உவைசி மட்டும் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கூறவில்லை. முன்னதாக இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் கட்சி மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டியது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்தார். 

மதத்தின் அடிப்படையில்  நாட்டையே பிரித்து காங்கிரஸ்தான் என்றும் பாஜக அல்ல என்றும் கூறிய அமித் ஷா, இந்த திருத்த மசோதா 0.001 சதவீதம் அளவுக்கு கூட சிறுபான்மை மக்களை பாதிக்காது என்று கூறினார். 

முன்னதாக இந்த மசோதா குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சசி தரூர், மதத்தின் அடிப்படையில் பாகுபாட்டை குடியுரிமை திருத்த மசோதா காட்டுவதாகவும், குறிப்பிட்ட 6 மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே குடியுரிமையை பெற வழி வகுப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

.