ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மக்களிடம் கருத்தை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு இனி சுற்றுச் சூழல் அனுமதியைப் பெறவோ, பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவோ தேவையில்லை என்று சமீபத்தில் உத்தரவு வெளியானது. இந்த உத்தரவு டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்ப முயல்கின்றன. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட மாட்டாது' என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா பகுதி மக்களின் கருத்தை கேட்காமல் செயல்படுத்தக் கூடாது. மக்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்ற முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பனை எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது. இதனை எதிர்த்து கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.