This Article is From Jan 21, 2020

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகத்தான். அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டமாக இருக்கும்.

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும் - விஜயகாந்த்


ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இதனால், தற்போது மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக தேமுக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன் இந்தத் திட்டத்தின் சாதக, பாதகங்களை மத்திய அரசு தெளிவான விளக்கங்களை விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியப்படுத்தி, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி விளக்கம் கொடுக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் அழிந்து போகும் என்ற ஒரு அச்சுறுத்தல் விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது. அதனால் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும்.

மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகத்தான். அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டமாக இருக்கும். எனவே மத்திய அரசு இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்" என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

.