பிரதமர் மோடி, கடந்த சில மாதங்களாகவே, ‘நான் ஒரு சவுகிதார் (காவலாளி)’ என்பதை பல பிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பல்வேறு வித பிரசார யுக்திகளை கையில் எடுத்துள்ளனர். பாஜக, ‘சவுகிதார்' பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, ‘சுவுகிதார் நரேந்திர மோடி' என்று தனது பெயரை ட்விட்டரில் மாற்றிக் கொண்டார். அதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித்ஷா உட்பட, அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தங்களது பெயருக்கு முன்னர் ‘சவுகிதார்' என்று போட்டுக் கொண்டனர். பாஜக ஆதரவாளர்களும் இந்த பிரசார யுக்தியைப் பின்பற்றினர். ஆனால் பாஜக-வின் மூத்த நிர்வாகி, சுப்ரமணியன் சுவாமி அப்படி எதையும் செய்யவில்லை. அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நான் சவுக்கிதார் இல்லை. நான் பிராமணர். நான் சவுகிதார் ஆக மாட்டேன். நான் கருத்து கொடுப்பேன். அந்த கருத்தின்படி பல சவுகிதார்களுக்கு வேலை செய்வேன்' என்று பேசியுள்ளார். பாஜக, ஒரு பக்கம் தனது தேர்தல் வியூகத்தை அமைத்து வந்தால், சுப்ரமணியன் சுவாமி நேரெதிராக கருத்து கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி, கடந்த சில மாதங்களாகவே, ‘நான் ஒரு சவுகிதார் (காவலாளி)' என்பதை பல பிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பாக சென்ற மாதம், இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பாலகோட்டில் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, ‘சவுகிதார்' என்பதை பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானிக்குச் சாதகமாக நடந்து பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை மடைமாற்றியுள்ளார் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதையொட்டி அவர், ‘பிரதமர் மோடி சவுகிதார் அல்ல சோர்' என்றார். அதாவது, ‘காவலாளி அல்ல திருடன்' என்று கூறியுள்ளார்.