"ஒரு வித்தியாசமும் இருக்காது. இப்போது திறந்தவெளி சிறையில் இருக்கிறோம். அப்போது கம்பி போட்டு அடைக்கப்பட்ட சிறையில் இருப்போம்"
ஹைலைட்ஸ்
- முதலில் ஜனாதிபதி குடியுரிமையை நிரூபிக்கட்டும்: சீமான்
- நான் ஆவணங்களைக் காட்டப் போவது கிடையாது: சீமான்
- விக்கிரமசிங்கபுரம் கூட்டத்தில் சீமான் ஆவேசப் பேச்சு
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விக்கிரமசிங்கபுரத்தில், அனைத்து ஜமாத்தார்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு எதிராக பொதுக் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்கள். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சீற்றமாக உரையாற்றினார்.
சீமான் உரையின்போது, “சிஏஏ என்கிற சட்டம் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு இல்லை மக்களே, இந்த நாட்டின் மொத்தக் குடிகளுக்கும் எதிரானது. அப்படிப்பட்ட சட்டத்திற்குச் சான்றிதழ் வேண்டுமென்று கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், இந்த நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி அதற்குரிய சான்றைக் காட்டி, தான் ஒரு குடிமகன் என்று நிரூபிக்கப்பட்டும். அதன் பிறகு பிரதமர் மோடி காட்டட்டும். பின்னர் அமித்ஷா, அதன் பின்னர் மத்திய அமைச்சர் பெருமக்கள் காட்டட்டும்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 70 ஆண்டுகள் நாங்கள் இந்தியக் குடிமக்களா என்று தெரியாமலேயேதான் ஆட்சி செய்தீர்களா. அது எப்படிச் சாத்தியமாயிற்று.
ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். பல பேரிடம் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்று காட்டுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் தங்களை இந்த நாட்டின் குடிகள் என்பதை நிரூபிக்க முடியும். நான் குடிமகன் என்பதற்கு எந்த ஆதாரமும் காட்டப் போவது கிடையாது. என்னிடம் ஆவணங்கள் இருந்தாலும் அதைச் செய்யப் போவது இல்லை.
நான் அவர்களின் தடுப்புக் காவல் முகாமிற்குத் தயாராகிவிட்டேன். பெட்டிப் படுக்கையையெல்லாம் கட்டிவிட்டேன். ஒரு வித்தியாசமும் இருக்காது. இப்போது திறந்தவெளி சிறையில் இருக்கிறோம். அப்போது கம்பி போட்டு அடைக்கப்பட்ட சிறையில் இருப்போம். நீங்களும் தயாராகிவிடுங்கள்,” என்று பேசினார்.