வரும் 5 ஆம் தேதி, அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்ததை அடுத்து, திமுக-வில் பனிப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதிப் பேரணி குறித்து அழகிரி, ‘நான் தலைவரின் மகன். கண்டிப்பாக சொன்னதைச் செய்வேன்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் 8 ஆம் தேதி மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, சில நாட்களுக்குப் பின்னர் கருணாநிதி அடக்கம் செய்த இடத்துக்குச் சென்ற அழகிரி, ‘என் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அது குறித்து மக்களுக்கு விரைவில் தெரியவரும். திமுக-வின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் தான் உள்ளனர்’ என்று கருத்து கூறி பகீர் கிளப்பினார்.
தொடர்ந்து அவர், செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார். ‘அமைதிப் பேரணியைத் தொடர்ந்து திமுக-வுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் வரும். என் தேர்தல் பணிகளையும், ஒருங்கிணைப்புப் பணிகளையும் எனது அரசியல் எதிரிகள் கூட பாராட்டுவர். சில திமுக தலைவர்கள் இப்போதாவது என்னைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்’ என்றார். தொடர்ந்து அவர் திமுக-வுக்கு எதிராகவும், திமுக-வின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அவர், ‘நாங்கள் திமுக-வில் இணைய தயாராக இருக்கிறோம். கட்சியில் சேர்ந்தால், ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க தயார் என்றுதான் அர்த்தம்’ என்று கூறி யூ-டர்ன் அடித்தார். தற்போது அமைதிப் பேரணி நடந்தே தீரும் என்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, கட்சிக்கு எதிராக நடந்ததாக கூறி, அழகிரியை திமுக-விலிருந்து நீக்கினார் அப்போது தலைவராக இருந்த கருணாநிதி.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)