அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும், ராஜ் தாக்கரே
Amaravati: மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, #MeToo குறித்தும் நானா படேகர் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் நானா படேகர், தனக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்து மிரட்டியதாக குற்றம் சுமத்தியிருந்நார் தனுஸ்ரீ. இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் #MeToo விவகாரம் இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் தான் விஸ்வரூபம் எடுத்தது. தனுஸ்ரீ வெளிப்படையாக தனது அனுபவத்தைப் பகிர்ந்த பின்னர் பல பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன, மத்திய அமைச்சராக இருந்த அக்பர் மீதும் பலர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ் தாக்கரே, ‘எனக்கு நானா படேகர் பற்றி தெரியும். அவர் ஒழுக்கமற்றவர் தான். அவர் சில அதிர்ச்சியளிக்குக்கூடிய விஷயங்களை செய்யக் கூடியவர் தான். ஆனால், இப்படிப்பட்ட காரியத்தில் அவர் ஈடுபட மாட்டார் என்று நினைக்கிறேன். நீதிமன்றம் தான் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டும். ஊடகங்களுக்கு இதில் என்ன வேலை இருக்கிறது. #MeToo என்பது மிக முக்கிய மான விஷயம். அது ட்விட்டரில் முடங்கி விடக் கூடாது.
நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றிலிருந்து திசைத் திருப்ப இப்படிப்பட்ட ஒரு விஷயம் கிளப்பி விடப் படுகிறதோ என்ற சந்தேகமும் வருகிறது. #MeToo போன்ற ஒரு பிரச்னையை பெண்கள் சந்தித்தால், அவர்கள் எங்களிடம் வரலாம். நாங்கள் குற்றவாளிக்கு நல்ல பாடம் புகட்டுவோம். எந்த ஒரு அடக்குமுறைக்கு எதிராகவும் பெண்கள் உடனடியாக குரலெழுப்ப வேண்டும். 10 ஆண்டுகள் கழித்து அதைச் செய்யக் கூடாது’ என்று பேசியுள்ளார்.