பொது வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகுகிறேன்- ஜெ.தீபா
அரசியலில் இருந்து விலகுகிறேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளருமான ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார்.
எனக்கு அரசியலே வேண்டாம், பொது வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகுகிறேன். என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டாம் மீறி அழைத்தால் காவல்துறையிடம் புகார் செய்வேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பதிவில் ஜெ.தீபா கூறியதாவது, எனக்கு அரசியலே வேண்டாம், எனது பேரவையை அதிமுகவோடு இணைத்துவிட்டேன். வருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.
எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை. தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை தொலைபேசியில் அழைத்து துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுகிறேன் என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
முன்னதாக மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது பேரவையை அதிமுகவோடு இணைத்துவிட்டேன் என்றும் முழுமையாக அரசியலில் இருந்து விலகுவதாக தீபா அறிவித்திருப்பது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, பதிவிட்ட சில மணி நேரங்களில் தனது முகநூல் பக்கத்திலிருந்தும் தனது பதிவை ஜெ.தீபா நீக்கி விட்டார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து முறையாக தனது அரசியல் முழுக்கு குறித்து அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.