This Article is From Jan 30, 2020

'நானும் கலைஞர் பிள்ளைதான்; நினைத்ததை சாதிப்பேன்' - மு.க. அழகிரி அதிரடி பேச்சு!!

மதுரையில் தனது ஆதரவாளர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அங்கு தனது 69-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

Advertisement
தமிழ்நாடு Written by

2014-ம் ஆண்டின்போது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி அழகிரி திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நானும் கலைஞர் பிள்ளைதான் என்றும், நினைத்ததை சாதித்து முடிப்பேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேசியுள்ளார். 

மதுரையில் தனது ஆதரவாளர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அங்கு தனது 69-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 

பின்னர் விழாவில் அவர் பேசியதாவது-
அதிமுககாரர்கள் என்னைப் பார்த்தால் பேசுகிறார்கள். வணக்கம் போடுகிறார்கள். நான் தான் இந்த ஊர் எம்.எல்., ; நான்தான் இந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்று என்னிடம் அறிமுகம் ஆகிக் கொள்கின்றனர். நானும் அவர்களிடம் பேசுகிறேன். 

ஆனால் என்னுடன் பழகியவர்கள் என்னைப் பார்ப்பதற்கு வரவேயில்லை. நான் ஓரிடத்திற்கு வந்து சென்ற பின்னர் வருகிறார்கள். அந்த அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. அது மாற வேண்டும். மாறாவிட்டால் அவ்வளவுதான்; ஏனென்றால் என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். நான் நினைத்ததை சாதிப்பேன்; நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும் கலைஞரின் பிள்ளைகள் அல்ல; நானும் கலைஞரின் பிள்ளைதான் என்பதை மறந்து விடக் கூடாது.

Advertisement

இவ்வாறு மு.க. அழகிரி பேசினார். 

மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக கோபாலபுரத்தில் 1950 ஜனவரி 30-ம்தேதி பிறந்தவர் அழகிரி. 

Advertisement

திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அவர் கடந்த 2009-ல் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். 

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அழகிரி திமுகவிலிருந்து கடந்த 2014 மார்ச் 25-ம்தேதி நீக்கப்பட்டார்.

Advertisement

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின்போது, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் பேசினார்.  இதுகுறித்து கருத்து தெரிவித்த மு.க. அழகிரி,  “ரஜினி சொன்னது உண்மைதான். தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை ரஜினியால்தான் நிரப்ப முடியும்,” எனக் கூறி பகீர் கிளப்பினார்.

அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அழகிரியின் அரசியல் நகர்வு என்ன மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். 
 

Advertisement