This Article is From Nov 22, 2018

ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து ஆய்வு செய்தேன்: எடப்பாடி விளக்கம்

சாலை வழியாக சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களுக்கு சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். 3 இடங்களுக்கு சென்றார்.

ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து ஆய்வு செய்தேன்: எடப்பாடி விளக்கம்

கஜா புயல் பாதித்த இடங்களை, ஒவ்வொரு பகுதியிலும் என்ன மரங்கள் சாய்ந்துள்ளன? எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன? என்பதை ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து ஆய்வு செய்தேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், நிவாரண பணிகளுக்கான நிதியை பெறவும், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல்வர் எடப்பாடி நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி, இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்து உள்ளார். சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர கோரிக்கை வைத்து உள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

கஜா புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளோம். இடைக்கால நிவாரணமாக ரூ.1500 கோடி உடனடியாக வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். நிரந்தர நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம்.

தொடர்ந்து, புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர்,

சாலை வழியாக சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களுக்கு சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். 3 இடங்களுக்கு சென்றார். பின்னர் பாதியிலேயே திரும்பி விட்டார். அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரில் சென்றேன்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் என்ன மரங்கள் சாய்ந்துள்ளன? எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன? என்பதை ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து ஆய்வு செய்தேன். ஹெலிகாப்டரில் சென்றதால்தான் புயல் பாதிப்பு முழுமையாக தெரிந்தது என்று அவர் கூறியுள்ளார்.
 

.