மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தேனி ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது, நான் ஹெலிகாப்டரில் வரும்போது மைதானத்தில் கூடியிருக்கும் மக்களை கண்டேன், சாலை எங்கும் இருக்கும் மக்களை கண்டேன்.
காங்கிரசும், திமுகவும் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவினர் சிறையில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சியை அவர்கள் விமர்ச்சித்தனர். ஆனால் தற்போது, கடந்த கால கசப்புகளை மறந்து, ஊழல்களை ஆதரிக்கவும், என்னை எதிர்க்கவும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
திமுக தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக அறிவித்தார். ஆனால் மக்கள் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. அந்த கூட்டணியில் உள்ள யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டு உள்ளது. உங்கள் காவலாளியாகிய நான் உஷாராக இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ன திருட்டுதனம் செய்தாலும் நான் கண்டுபிடித்து விடுவேன். நாட்டு மக்களை யாரும் முட்டாளாக்க விடாமல் நான் காவலாளியாக இருக்கிறேன்.
தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்க விரும்புறேன். காங்கிரசும், திமுகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். சர்ஜிக்கல் ஸ்ட்டிரைக் நடத்திய ராணுவத்தின் வீரத்தை கேள்வி கேட்கிறார்கள். ராணுவத்தை அவமதிக்கும் எதிர்கட்சிகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்.
தேச பாதுகாப்பை அரசியலாக்கி, ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதிக்கிறது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது. அபிநந்தனை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சியை அவமதிக்கிறார்கள் என்று அவர் கடுமையாக குற்றம்சாட்டினர்.