Darbar - Sasikala Row: அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்' (Darbar) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சில காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை வரவேற்றுப் பேசியுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமாரிடம், “சார், தர்பார் படத்தில் சசிகலாவுக்கு எதிரான வசனங்கள் வருவதாக சொல்லபடுகின்றதே. அது பற்றி…” என்று ஒரு நிருபர் கேட்க,
சிரித்துக் கொண்டே பதில் அளித்த ஜெயக்குமார், “நானும் அதை தொலைக்காட்சிகள் மூலம் கேள்விப்பட்டேன். பணம் பதாளம் வரை பாயும் என்பார்கள். சசிகலா, தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறார். சிறைச் சாலையிலும் அதை நிகழ்த்தியவர் அவர். அது குறித்து விசாரணை நடந்து வருவதால், மிக ஆழமாக கருத்து கூற விரும்பவில்லை.
ஆனால், பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் இந்த சமூகத்தில் செய்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கும் தர்பார் படக் காட்சி ஒரு பாடமாக இருக்கும். அதைப் போன்ற கருத்துகளை வரவேற்கிறோம். சமூகத்திற்கு நல்ல கருத்தைச் சொல்லும் திரைப்படங்களை நாங்கள் எப்போதும் வரவேற்போம்,” என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமீபத்தில், அமமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த புகழேந்தி, மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கர்நாடக மாநில அதிமுகவின் செயலாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலாவுக்கு நெருக்கமான இவர், டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்து, அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும், தொடர்ந்து சசிகலாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார் என்றுதான் சொல்லப்படுகிறது. இப்படி அதிமுகவிலேயே பலரும் சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்து வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு சசிகலா, கர்நாடகாவில் அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் வண்ண உடை போட்டு, ஹாயாக வாக்கிங் போன வீடியோ காட்சிகள் வெளியாகி பகீர் கிளப்பின. பல வசதிகளுடன் சசிகலா சொகுசாக சிறையில் காலத்தைக் கடத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து தற்போதும் விசாரணை நடந்து வருகிறது.