This Article is From Feb 21, 2019

கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்: பொன்.ராதா

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்: பொன்.ராதா

அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன. இவற்றை பங்கீடு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த பரபரப்பான சூழலில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை திமுக – காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் பெற முயற்சிப்பதால் அது இழுபறியான அணியாக உள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.

.