அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்கதமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று நேற்று முன்தினம் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு, அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்கதமிழ்ச்செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது.
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து, அமமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, தங்கதமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவுக்கே செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், அமமுக நிர்வாகியிடம், தங்கத் தமிழ்ச்செல்வன் பேசுகிறார். அதில், 'இந்த மாதிரி ஒரு அரசியல் செய்றத நிப்பாட்ட சொல்லுப்பா, உங்க அண்ணண'என்கிறார். நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்கமாட்டீர்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கிறார்.
இதுகுறித்து தங்கதமிழ்செல்வன் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறும்போதும், கட்சியை பற்றி நான் பேசியது உண்மை தான்; என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசும்போது, யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அச்சமோ, தயக்கமோ இல்லை. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம்லாம் எடுக்க முடியாது. என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பெட்டிப் பாம்பாக அடங்குவார் என்று கூறினார்.
இந்நிலையில் டிடிவி பேச்சு குறித்து தங்க தமிழ்செல்வன் தொலைக்காட்சி பேட்டியில் கூறியதாதவது, கட்சிக்கான வேலையை மட்டும் தலைமை பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு என்னை பற்றி அவதூறு பரப்புகிறார் டிடிவி.
18 எம்.எல்.ஏக்களின் பதவிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அவர்களின் குடும்பங்கள் எவ்வளவு வேதனையில் உள்ளது தெரியுமா? வேலுமணியிடமும் தங்கமணியிடமும் நான் பேசியதே இல்லை. அவர்கள் என்னை ஆட்டிப்படைப்பதாக டிடிவி கூறுகிறார்.
கருத்துக்களை கேட்கவில்லை என்றால் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வேன். அதை தலைமையில் இருப்பவர் தாங்கிக்கொள்ள வேண்டும். கூப்பிட்டு பேச வேண்டும். டிடிவியிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கு. இவரு எனக்கு என்ன சோறு போடுறாரா. தராதரம் இல்லாத பேச்சு பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.