இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரிய டிடிவி தினகரனின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தோ்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி அளவில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில், டிடிவி தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை. இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, குற்றப்பத்திரிக்கையில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். போலீசாரின் குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது என்று கூறி அவரது கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.