This Article is From Feb 26, 2019

எதற்கும் தயாராக இருங்கள்! - பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை!

பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை தொடர்ந்து இம்ரான்கான் அவசர ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார்.

ஹைலைட்ஸ்

  • இந்திய தாக்குதலை தொடர்ந்து இம்ரான்கான் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டுள்ளார்.
  • பாகிஸ்தானின் முப்படைகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளது.
  • இந்தியா நடத்திய தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள்.
New Delhi:

எதற்கும் தயாராக இருங்கள் என பாகிஸ்தான் மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவசர ஆலோசனை கூட்டத்தை மேற்கொண்டுள்ளார். புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவில் மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள், நாட்டின் எல்லையைத் தாண்டி லேசர் வசதி கொண்ட 1,000 கிலோ வெடிகுண்டுகளை இலக்குகள் மீது போட்டுள்ளன.

முதல் வெடிகுண்டு இன்று அதிகாலை 3:45 மணிக்கும், அடுத்த தாக்குதல் 3:48 மணிக்கும் அதற்கடுத்த தாக்குதல் 3:58 மணிக்கும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தாக்குதல் ஆபரேஷனும் 19 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 


 

.