இறுதிக்கட்ட மதிப்பெண்கள் வெளியிடப்படும்போது இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
New Delhi: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மை தேர்வு நாளை தொடங்கி செப்டம்பர் 29-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு முதன்மை தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 11 ஆயிரத்து 845 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வு முடிந்த நிலையில், அதில் இருந்து 11 ஆயிரத்து 845 பேர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தேர்வு நாளை தொடங்கி செப்டம்பர் 29-ம்தேதி வரை நடைபெறும்.
2019-20-ம் ஆண்டுக்கு மொத்தம் 896 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் 12 அல்லது 13 மடங்குப்பேர் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
முதன்மைத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களுடன் கணக்கில் கொள்ளப்படும். மொத்தம் 1,750 மதிப்பெண்களுக்கு முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு பெறுபவர்கள், அடுத்த கட்டமான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அதில் பெற்ற மதிப்பெண்களுடன், முதன்மைத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களையும் சேர்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.
சுமார் ஆயிரம் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.