ஷா ஃபேசல் தனது ராஜினாமா கடிதத்தை மாநில அரசிடம் வழங்கினார்.
Srinagar: 2010ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேசல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்க உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஷா ஃபேசல் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, இந்திய முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதற்கு எதிராகவும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோருபவர்கள் மீது நயவஞ்சகமான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு எதிராகவும் போராடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
எனினும், ஷா ஃபேசல் தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிபடுத்தும் விதமாக, ஷா ஃபேசலின் ராஜினாமாவுக்கு ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரத்துவத்தின் இழப்பானது, அரசியலின் ஆதாயம் என்றும் அவரது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து தெளிவுபடுத்தி ஒமர் அப்துல்லா, நான் அவரது முடிவுக்கு வரவேற்பு மட்டுமே தெரிவித்தேன். அவரது அரசியல் முடிவு குறித்து அவரே தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஷா ஃபேசல் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, தேசபக்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் சகிப்புத்தன்மையும் வெறுப்பரசியலும் மேலோங்கி வருகிறது. காஷ்மீரில் தொடரும் கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவித நேர்மையான அணுகுமுறையும் கிடைக்கவில்லை,
இந்துத்துவா சக்திகள் தங்கள் கரங்களால் இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லிம்களை ஓரங்கட்டவும், அவர்களது இருப்பை காலிசெய்யவுமான காரியங்களை செய்துவருகிறது. இதற்கொரு முடிவுகட்டியாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.