ரியாக்ஷன் செய்த பேராசிரியர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஹட்சிசன்.
ஐஐடி நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய பேராசிரியர்கள் ரியாக்ஷன் செய்துள்ளனர். இந்த யூடியூப் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் டாப் பொறியியல் கல்வி நிறுவனங்களாக ஐஐடி-க்கள் விளங்குகின்றன. இதில் சேர்வதற்கு Joint Entrance Examination எனப்படும் JEE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் கணிதம், இயற்பியல், வேதியியல் அறிவைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். இவை கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறிய நிலையில், அந்த கேள்விகளை படித்து ஆஸ்திரேலிய பேராசிரியர்கள் ரியாக்ட் செய்துள்ளனர். இந்த காட்சிகள் இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யூடியூப் வீடியோவில் டிபீஸ் என்ற சேனல் வரும் தொகுப்பாளர் ஜே.இ.இ. வினாத்தாள் குறித்து பேராசிரியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஜேம்ஸ் ஹட்சிசன் அளித்த பதிலில், 'வினாக்கள் உங்களை அச்சறுத்தாவிட்டால் நீங்கள்தான் மிகச்சிறந்த மாணவர். நான் 12-ம் வகுப்பு படித்து இந்த தேர்வை எழுதக் கூடியவனாக இருந்திருந்தால் வகுப்பறையை விட்டு அழுதவாறே வீடு திரும்பியிருப்பேன் ' என்று கிண்டலாக கூறியுள்ளார்.
இன்னொரு பேராசிரியர் பேர்ரி ஹியூஸ், 'கணித வினாக்களை பார்த்தேன். சிலவற்றுக்கு விடையளிக்க ஒரு மணி நேரம் கூட ஆகும்' என்று கூறியுள்ளார்.
ஷேன் ஹன்டிங்டன் என்ற பேராசிரியர், நிறைய கேள்விகள் மனப்பாடத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. இது மோசமான ஒரு செயலாகும் என விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ பரவலாக குறிப்பாக பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. குறைந்த நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ பெற்றிருக்கிறது.