This Article is From Jun 09, 2020

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும்;உச்ச நீதிமன்றம்

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த ஒரு பட்டியலை தயாரித்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும்;உச்ச நீதிமன்றம்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.66 லட்சமாக உயர்ந்திருக்கக்கூடிய நிலையில், லாக்டவுன் அறிவித்து 60 நாட்களுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை மாநில, யூனியன் பிரதேச மற்றும் மத்திய அரசுகள் திரும்ப பெற பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த ஒரு பட்டியலை தயாரித்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு புலம் பெயர் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்தது. முன்னதாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் மற்றும் பேருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. மேலும், பயண காலக்கட்டத்திலும், முகாம்களில் தங்கியிருக்கக்கூடிய காலத்திலும் அவர்களுக்கு தேவையான உணவுகளை சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பயணத்திற்கு ரயில் வசதி கோரினால் 24 மணி நேரத்திற்குள் ரயில் வசதி செய்து தரப்பட வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பிலிருந்து ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜூன் 3 வரை ரயில்வே 4,228 சிறப்பு "ஷ்ராமிக்" ரயில்களை இயக்கியுள்ளதாகவும் இதன் மூலமாக 57 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 41 லட்சம் பேர் சாலை மார்கமாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சிறப்பு ரயில்களில் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் எந்த இறப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

புலம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த பிரமாணப் பத்திரங்களை ஜூலை 8 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.

லாக்டவுன் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு, மே 1-ம் தேதி முதல் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

.