New Delhi: மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், பாஜக-வுடனான தனது உறவு குறித்து பேசியுள்ளார்.
அவர், ‘நான் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளேன். எனக்கும் அவர்களுக்கும் கொள்கை முரண்பாடு இருக்கிறது. ஆனால் பகைமை கிடையாது’ என்று பாஜக-வுடனான உறவு குறித்து தெளிவு படுத்தியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல், மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, ‘தற்சமயம் யாருடனும் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
மேலும் அவர், ‘பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்திக்க முயன்றேன். ஆனால், அதற்கு நேரம் அமையவில்லை’ என்றார்.
நேற்று மாலை மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக-வின் தலைவருமான மு.கருணாநிதிக்கு அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர், ‘கருணாநிதிதான் எல்லா நடிகர்களுக்கும் வாத்தியார். மிக அற்புதமான 70 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை கருணாநிதிக்கு அமைந்தது. அரசியலில் அவர் செய்த தவறுகளும் அவர் அடைந்த வெற்றிகளும் நமக்கு ஒரு பாடம்’ என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த பிப்பரவரி மாதம், கமல், தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். சமீபத்தில் தான் கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி கமல் பதிவு செய்தார்.