Chennai: சென்னை: சிலை கடத்தல் வழக்கில், டி.வி.எஸ் குழும தலைவர் வேனு சீனிவாசனை கைது செய்ய 6 வார காலத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைலார்ப்பூர் சிலைகள் மாயனமான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் யானை இராஜேந்திரன் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில், டிவிஎஸ் குழும தலைவர் வேனு சீனிவாசனையும் எதிர் மனுதாரராக சேர்த்திருந்தார். மேலும், சீனிவாசன் மீது மைலாப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, சிலை கடத்தல் வழக்கில் முன் ஜாமின் கேட்டு வேனு சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த முன் ஜாமின் மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில், வேனு சீனிவாசனை 6 வார காலத்திற்கு காவல் துறையினர் கைது செய்ய தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் ஆஜரான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.