சென்னை சைதாபேட்டையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 89 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிலை கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீனதயாளன் என்பவர் அளித்த தகவலின் பேரில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள், கோவில் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் திருட்டு சிலைகள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
இந்த சிலைகள் 100 வருடத்துக்கு மேல் பழமையானவை. இவை தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து திருடப்பட்டவை. விற்பனை உரிமம் இல்லாதவர்களிடம் ரன்வீர் ஷா சிலைகளை வாங்கி உள்ளார். அவர் யாரிடம் சிலைகளை விற்றார் என்று விசாரணை நடத்தப்படும். 12 உலோக சிலைகள், 22 கல் தூண்கள் என மொத்தம் 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இங்கு, மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் இந்து கோயில்களில் வைக்க வேண்டிவை.
பழமையான சிலைகளையோ, தொல் பொருட்களையோ விற்பனை செய்வதற்கான உரிமம் யாருக்கும் வழங்கப்படவில்லை இருப்பினும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி அஷோக் நடராஜன், கைப்பற்றப்பட்ட இந்த சிலைகளை யாரிடமிருந்து அவர் வாங்கினார் என்பதற்கான ஆதாரங்களை வைத்துள்ளார். இருப்பினும் இதற்கு முன் இந்த சிலைகள் எங்கிருந்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. சில சிலைகளை தீனதயாளனிடமிருந்து வாங்கியுள்ளார். மேலும் சில சிலைகளை கேரளா, புதுச்சேரியில் இருந்து வாங்கியுள்ளார் என்றார். மேலும், சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)