மத்திய ரயில்வே இணைய அமைச்சர் சுரேஷ் அங்காடியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
New Delhi: பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்கள் உள்பட பொதுச் சொத்துக்களை யாரேனும் சேதப்படுத்தினால் அவர்களை கண்டதும் சுட்டுத் தள்ள வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கு வங்கத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ரயில்வேத்துறை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ரயில்வே சொத்துக்கள் சேதம் அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாது. ரயில்வேயில் 13 லட்சம் பணியாளர்கள் இரவு பகல் பாராது நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கின்றனர்.
ஆனால் சில எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற சில சமூக விரோத கும்பல்கள் நாட்டில் பிரச்னையை கிளப்புகின்றன. வல்லபாய் படேல் மேற்கொண்டதைப் போன்று அவர்களுக்கு எதிராக நாட்டில் கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.' என்று கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வடகிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த சூழலில் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.