This Article is From Jan 29, 2019

தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! - கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை!

தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8வது நாளாக நடந்து வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், அதைத்தொடர்ந்து, வரும் வெள்ளி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

Advertisement

இந்தச் சூழலில் ஜாக்டோ ஜியோ ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்த தலைமைச்செயலக ஊழியர்கள் 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதித்துறையை சேர்ந்த 4 பேர், சட்டப்பேரவைச்செயலகம், வேளாண்துறை, பொதுப்பணித்துறை, உள்துறைகளை சேர்ந்த தலா 1 நபர்கள் என மொத்தம் 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் எனவும் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், தலைமை செயலக ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நாளை போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊதியம் வழங்கப்படாது எனவும் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தவிர நாளை விடுப்பு எடுக்க கூடாது எனவும் பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement