This Article is From Dec 18, 2019

குடியுரிமை மறுக்கப்பட்டால்.. இருக்கவே இருக்கு கைலாசா! - சீமான் அசத்தல் யோசனை!

மம்தா பானர்ஜி போல் ஒரு தலைவர் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும். இங்கு மதம் அரசை ஆளுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரித்ததற்குக் காரணம் மதம் தான். 

குடியுரிமை மறுக்கப்பட்டால்.. இருக்கவே இருக்கு கைலாசா! - சீமான் அசத்தல் யோசனை!

குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை. எங்களுக்கு இருக்கவே இருக்கு, நித்யானந்தாவின் கைலாசா நாடு.

எனது குடியுரிமை மறுக்கப்பட்டால்.. இருக்கவே இருக்கு நித்யானந்தாவின் கைலாசா நாடு, அங்கு சென்றுவிடுவேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக தெரிவித்துள்ளார். 

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டு சட்டம் அமலுக்கும் வந்தது. 

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இதனிடையே, மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் நேற்றைய தினம் திமுக தலைமையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, இன்றைய தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வருகிற 23ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய பேரணியை நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது,  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கொந்தளித்து வருகின்றனர், உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் உள்நாட்டுப் போர் வெடிக்கும்.

திபத்தியருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு கொடுக்காதது ஏன்? நாட்டின் பாதுகாப்பிற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறுவது முட்டாள்தனமானது

மம்தா பானர்ஜி போல் ஒரு தலைவர் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும். இங்கு மதம் அரசை ஆளுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரித்ததற்குக் காரணம் மதம் தான். 

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை. எங்களுக்கு இருக்கவே இருக்கு, நித்யானந்தாவின் கைலாசா நாடு. அங்கு சென்று விடுவேன்,.எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருப்பதாக கிண்டலாக அவர் கூறினார்.

.