துரைமுருகன் அதிமுகவுக்கு வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார்
திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவுக்கு வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரம் அருகே பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் உள்ள மண்டலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் அவசிய தேவைக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அவரிடம் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவுக்கு சென்றது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீர் பூத்த நெருப்பு தற்போது புகைந்து கொண்டிருக்கிறது முதல் விக்கெட் கு.க.செல்வம் என்றார்.
மேலும் பேசிய அவர், துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார், பொதுச்செயலாளர் பதவிக்கு தான் அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவராகத்தான் இருக்கும் என்றார்.
தொடர்ந்து, அதிமுகவிற்கு துரைமுருகன் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திராவிட இயக்கத்தின் பாசம் துரைமுருகன் மீது இருக்கிறது. அவர் அதிமுகவுக்கு வந்தால் கட்சி நல்ல முடிவு எடுக்கும்.
துரைமுருகன் அதிமுகவுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க எங்களது இயக்கம் தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.