Seeman on Telangana Encounter - "பெண்களை வெறுமனே ஒரு போகப் பொருளாக மற்றும் பார்த்து, வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்த தண்டனையும் தீர்வாகாது என்றும் நம்புகிறோம்"
Seeman on Telangana Encounter - தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தியாவையே கலங்கடித்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ். இன்று அந்த 4 பேரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய போலீஸ் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 4 பேரும் தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும், அதனால் என்கவுன்ட்டரில் அனைவரையும் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான், “நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் வன்புணர்வுக்கு இதைப் போன்ற தண்டனையைத்தான் கொடுப்போம்,” என்று பகீர் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
“எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை தீர்வாகாது என்று நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், பெண்களை வெறுமனே ஒரு போகப் பொருளாக மற்றும் பார்த்து, வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்த தண்டனையும் தீர்வாகாது என்றும் நம்புகிறோம்.
அந்த வகையில் தெலங்கானா போலீஸ், சம்பவ இடத்துக்கே கொண்டு சென்று, குற்றவாளிகளைக் கொன்றுள்ளதை நான் மனதார வரவேற்கிறேன். அதை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். நம் தமிழக அரசு, பொள்ளாச்சி விவகாரத்தில் நடந்து கொண்டதே. அதைப் போல இனியும் ஒரு தவறு நடந்து விடக் கூடாது. பொள்ளாச்சி விவகாரத்தில் நாம் செய்தது வரலாற்றுப் பிழை.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை, சில மாதங்களில் விடுதலை செய்தீர்கள் என்றால், அவர்கள் மீண்டும் மீண்டும் அல்லவா அந்தத் தவறை இழைப்பார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானா மாதிரிதான் பின்பற்றப்படும். தேவையில்லாமல் அதைப் போன்ற நபர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து, மக்கள் வரிப் பணத்தில் சோறு போடுவதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாதது,” என்று செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார் சீமான்.