கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது - கே.எஸ்.அழகிரி
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, மத்திய அரசு வசம் உள்ள பங்குகளில் எத்தனை சதவீதம் பங்குகளை விற்பது என்று முடிவு செய்யவில்லை. பங்குகள் விற்பனை மூலம் எல்.ஐ.சி.யில் மக்களின் பங்களிப்பு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, சீர்திருத்தம் போன்ற பலன்கள் கிடைக்கும்.
மேலும், கம்பெனிகளின் பொதுக்குழுக் கூட்டங்களில் மக்களுக்கு நிர்வாகிகள் பதில் தர வேண்டியதிருக்கும். இதனால் ஒரு ஒழுக்கத்துக்குள் பொது நிறுவனங்கள் வரும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, மத்திய பாஜக அரசின் சாதனை என்று சொல்வதா? பொதுத்துறை என்பது மத்திய அரசின் சொத்து. மக்களின் சொத்து. அதைத் தனியாருக்கு அடிமாட்டு விலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆயுள் காப்பீடு என்பது நீண்டகாலத்திற்கானது என்பதால் மக்களின் பணம் அதிக காலம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருக்கும். அந்த வகையில் ரூபாய் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி, 2018-19 ஆம் ஆண்டு அரசுக்குரிய 5 சதவீத லாப பங்காக ரூபாய் 2,610 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது மக்களின் சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதற்குச் சமமாகும். மோடி அரசு இதைத் தவிர ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு முதலீடாக எல்ஐசி வழங்கி வருகிறது. இந்தியாவின் காமதேனுவாகக் கருதப்படுகிற எல்ஐசி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்து அதன் பாலிசிதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் இருந்து வருகின்றனர்.
134 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் 30 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்ஐசி நிறுவனத்தின் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் சிதைத்துத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை இந்தியக் குடிமக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக, உற்ற தோழனாகச் செயல்பட்டு வந்த எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.