மக்களுடைய நலனுக்காக நானும், கமல் அவர்களும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) 60 ஆண்டு கால திரைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், ‘கமல்-60' என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், “முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும்,” என்றார்.
இதற்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். அதற்கு அவர்களின் கொள்கைகளை மக்களிடத்தில் சொல்ல வேண்டும். அது குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், அதை விடுத்து எங்களை விமர்சித்தால், நாங்களும் பதிலடிதான் கொடுப்போம். அவர்கள் எங்கள் மீது கல்லெறிகிறார்கள். அப்படிச் செய்தால் நாங்கள் அதை திருப்பயடிப்போம். கல்லெறிய நினைத்தால் அவர்கள்தான் காயப்பட்டுப் போவார்கள்,” என்று கூறியிருந்தார்.
அதிசயம் நடந்தது என்ற ரஜினியின் கருத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் அரசியல் கட்சி நடத்தி வரும் கமலுடன் இணைந்து செயல்படுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, 'மக்களுடைய நலனுக்காக நானும், கமல் அவர்களும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம்' என்றார்.
ரஜினியின் கருத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், 'அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.' என்று பதில் அளித்தார்.