பாகிஸ்தான், தாங்கள் ஒரு புதிய நாடு என்றும், புதிய எண்ணம் கொண்டு இயங்குவதாகவும் கூறியுள்ளனர்
New Delhi: இந்தியா- பாகிஸ்தான் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையில் பிரச்னை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான் புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு காரணமாக இருந்தது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாலகோட்டில் இருக்கும் தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. பின்னர் நடந்த வான்வழிச் சண்டையில் இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமன், பாகிஸ்தானில் பிடிபட்டார். அவரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததை அடுத்து இரு நாட்டுப் பிரச்னையில் சுமூக தீர்வு எட்டப்படலாம் எனப்பட்டது. ஆனால், எல்லைக் கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பிரச்னை தணியாமல் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான் ரவீஷ் குமார் பத்திரியைளார்கள் மத்தியில் பேசுகையில், 'பாகிஸ்தான், தாங்கள் ஒரு புதிய நாடு என்றும், புதிய எண்ணம் கொண்டு இயங்குவதாகவும் கூறியுள்ளனர். அப்படியென்றால் பாகிஸ்தான், அவர்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், 'ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, தங்கள் தேசத்தில் இருந்து இயங்கவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தொடர்ந்து சமாளித்து வருகிறார். இந்தியா, எடுத்துக் கூறும் பிரச்னைகளைத் தீர்க்க பாகிஸ்தான் தயாராக இல்லை' என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விவகாரம் குறித்து நேற்று பேசுகையில், 'இப்போது பாகிஸ்தான் ஒரு புதிய நாடு. பாகிஸ்தானில் எந்த தீவிரவாத குழுக்களும் செயல்பட முடியாது' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதன் தொடர்ச்சியாக, 182 மதராஸாக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தான் தரப்பு, இதற்கு முன்னரும் இதைப் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும், சிறிது காலம் கழித்து நிலைமை மீண்டும் பழையபடி திரும்பிவிடும்.
இம்ரான் கானின் கருத்துக்குத்தான் இந்திய தரப்பு இன்று எதிர்வாதம் வைத்துள்ளது.