தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தோல்வி அடையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது.
அந்தவகையில், நேற்றைய தினம் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே தொடங்கிய இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், காதர் மொய்தீன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பாஜக தோல்வி அடையும் என்றும், குடியுரிமை சட்டத்திருத்தத்தில் பாஜக தோல்வி அடைந்து விட்டது எனவும் கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் முரணாக பேசுவதாக வைகோ குற்றம் சாட்டினார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசினார். தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டம் கொண்டுவரப்போவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி முரண்பாடாக பேசினார் என கூறியுள்ளார்.