அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் கிரிராஜ் சிங் ராகுலை விமர்சித்திருக்கிறார்.
Ranchi: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், காங்கிரஸ் கட்சி பொய்களைக் கூறி, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி விரும்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஊடுருவல்காரர்கள் மீது ராகுல் காந்தி அன்பு வைத்திருந்தால் அவர்களை அவர் இத்தாலிக்கு அழைத்துச் செல்லலாம் என்று கிரிராஜ் சிங் கண்டித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கொள்கைகளில் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டிய கிரிராஜ் சிங், முன்பு குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி, தற்போது குறிப்பிட்ட சமூகத்தை திருப்திபடுத்தும் அரசியல் காரணங்களுக்காக அதனை எதிர்ப்பதாக விமர்சித்திருக்கிறார்.
மத்திய கால்நடைத்துறை, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை அமைச்சரான அவர் அளித்துள்ள பேட்டியில், ‘பொய்களைப் பேசி நாட்டை பிளவுபடுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி விரும்புகிறது… ராகுல் காந்தி ஊடுருவல்காரர்கள் (அகதிகள்) மீது அன்பு வைத்திருந்தால் அவர்களை இத்தாலிக்கு அழைத்துச் செல்லலாம்' என்று தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இங்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் விரோத கொள்கைகளை பாஜக கடைபிடித்து வருவதாக விமர்சித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக, அவரது பேச்சுக்கு கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
கவுகாத்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு, அசாமின் கலாசாரம் மற்றும் அடையாளத்தின் மீது தாக்குதல் நடத்த முடியாது என்பதை பாஜகவுக்கு சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கிரிராஜ் சிங் பழமையான கட்சியான காங்கிரசும், ஒரு சில சிறிய குழுக்களும்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பதாக விமர்சித்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
‘காங்கிரஸ் செய்த பாவங்களான மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக அச்சத்தை பரவச் செய்ததை பாஜக துடைத்து வருகிறது' என்றும் கிரிராஜ் விமர்சித்தார்.
மகாத்மா காந்தியை குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பாகிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினரும் இந்துக்களும் ஒருகாலத்தில் இந்திய குடிமகன்களாக இருந்தவர்கள் என்றும், அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினால் மரியாதையுடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் காந்தி கூறியதை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. அதன்பின்னர் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை பின்பற்றுபவர்கள், ஜெய்னர்கள், பார்ஸி ஆகியோர் மத ரீதியிலான துன்புறுத்தலை எதிர்கொண்டனர். மரியாதைக்குரிய சகோதரிகள், பெண் குழந்தைகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் சம்பவங்கள் நடந்தன' என்றும் கிரிராஜ் சிங் விமர்சித்தார்.